அரசுப்பள்ளி நிகழ்வில் மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் சர்ச்சை பேச்சு.. பள்ளிகல்வித்துறை விசாரணை!
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியது தொடர்பாக அப்பள்ளியில் விசாரணைக் குழு நேரில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவதற்காக பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் அழைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மாணவர்களிடையே பேசிய மகா விஷ்னு அறிவுசார்ந்த பேச்சை தொடராமல், முன்ஜென்ம தவறுகளால் தான் தற்போது ஏற்றத்தாழ்வுகளுடன் மாற்றுத்திறனாளியாக மனிதன் பிறக்கிறான் என்ற வகையில் பேசினார்.
அதனைத் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் ஆணவமாக பேசிய மகா விஷ்ணு, நீங்க எடுப்பிங்களா ஆன்மீக கிளாஸ், வேறு யாரு எடுப்பாங்க என்று கூறி அவரின் வாயை அடைக்க முயற்சித்தார்.
இதையும் படிக்க: இது தப்பு’ அரசுப் பள்ளியில் பாவ, புண்ணியம், கர்மா வகுப்பு - தட்டிக்கேட்ட ஆசிரியரிடம் ஆணவப் பேச்சு!
அரசுப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை மரியாதை குறைவாக பேசிய மகா விஷ்ணுவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அரசுப்பள்ளியில் நேரில் சென்று விசாரணையில் ஈடுபடவிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.