பள்ளிக்கு தாமதமாகிவிட்டதாகக் கூறி அவசரத்தில் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் நடந்து சென்று, பள்ளி சிறுவர்கள் தண்டவாளத்து கடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பள்ளி செல்லும் நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் விரைவு ரயில் திடீரென சிக்னல் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது அவ்வழியாக செல்லவிருந்த பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலைக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் என ஏராளமானோர் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.
இப்படியான சூழலில் அவசரம் காரணமாக பொதுமக்கள் சிலர் ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியே குனிந்து நடந்து தண்டவாளத்தை கடந்துள்ளனர். இதைக்கண்ட பள்ளி மாணவ மாணவியர், கல்லூரி மாணவ மாணவியர், அவசரம் கருதி தாங்களும் பெரியவர்கள் காட்டிய அதே வழியில், `விரைந்து செல்ல வேண்டும்’ என்ற நோக்கத்துடன் ரயிலுக்கு அடியில் ஆபத்தான வகையில் கடந்து சென்றனர்.
இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரயில்வே அதிகாரிகள், தண்டவாளத்தை கடக்க இனியேனும் பாதுகாப்பான வழி ஏதும் செய்ய வேண்டுமென என பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.