கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே தம்பியின் காலணியை சுமந்தபடி ஓடோடி வந்த அண்ணன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம் அடுத்த சின்னகொசபள்ளம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். செங்கற்சூளையில் பணியாற்றி வரும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் விக்னேஷ் 6ம் வகுப்பில் சேரவுள்ளார். இந்நிலையில், இளைய மகன் ஹரிஹரனை பள்ளியில் விடுவதற்காக ரமேஷ் தனது மனைவியுடன் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் நின்றிருந்தார்.
அப்போது ஹரிஹரன் காலணி இல்லாமல் பள்ளிக்கு செல்வதை கவனித்த மூத்த மகன் விக்னேஷ், வீட்டில் இருந்த காலணியை எடுத்துக் கொண்டு, பெற்றோர் நிற்கும் சாலைக்கு ஓடியுள்ளார். அப்போது தனது தம்பியை பார்த்தவாறே விக்னேஷ் சாலையை கடக்க முற்பட்டபோது, விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார்.
பதறிப்போன பெற்றோரும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் விக்னேஷை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தம்பிக்கு காலணி எடுத்துச் சென்றபோது, பெற்றோர் கண் எதிரிலேயே, கார் மோதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் பெண்ணாடம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோ: