சைபர் கிரைம் மோசடி என்பது நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலமாக திரைப்பிரபலங்களின் பெயரில் ‘பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம்’ என விளம்பரம் செய்து பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தற்போது ஒரு நூதன முறை மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானசாதான் இதில் பாதிக்கப்பட்டுள்ளார். இவரும் இவரது கணவர் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ்வும் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள். இருவருமே ப்ரைம் டைம் சீரியலிலும் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படியிருக்கையில் நடிகை ஆலியா மானசா நிகழ்ச்சி ஒன்றில் ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ என்பது குறித்துப் பேசியதாக செய்தித்தாள் ஒன்றில் போலியான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பேட்டியின்படி ஆலியா மானசா “ஆன்லைன் முதலீடு ஒன்றில் 26,000 ரூபாய் முதலீடு செய்து குறைந்த காலத்தில் லட்சக்கணக்கில் நான் பணம் சம்பாதித்தேன்” என அவரே கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பலரையும் மோசடி வலையில் சிக்க வைக்க காரணமாக அமைந்தது.
அந்த செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் "இம்மிடேட் மேக்ஸிமம்" என்ற இணையதளம் ஓப்பனாகியுள்ளது. “இதில் முதலீடு செய்யவும். இது போன்ற ஒரு முதலீட்டில்தான், நானும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தேன்” என நடிகை ஆலியா மனசா தெரிவித்தது போல சம்பந்தப்பட்ட செய்தியில் இருந்துள்ளது. இது பலரையும் நம்ப வைத்து ஏமாற்ற ஆரம்பித்துள்ளதாக நடிகை ஆலியா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“முதலில் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நிறைய நெகடிவ் விஷயங்கள் வருவதால் இதை கவனிக்கவில்லை. உண்மையில் இதுபோன்ற எந்த ஒரு தகவலையும் நான் எந்த நிகழ்ச்சியிலும் தெரிவிக்கவில்லை. பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து இப்படி செய்துள்ளார்கள் என எனக்கு புரிந்தது. ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் இப்படியான நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலா சாஜி என்பவர் ஆன்லைனில் முதலீடு செய்யுமாறு கூறிய விளம்பரம் தொடர்பாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நடந்திருந்தது. அதில் விளம்பரம் செய்ததே அமலா சாஜிதான். ஆனால் இந்த விவகாரத்தில் ஆலியா மானசா அப்படியான எந்த பொறுப்பற்ற விளம்பரத்தையும் செய்யவில்லை. அப்படியிருக்கையில் ஆலியா மானசா பெயரில் நூதன முறையில் நடந்திருக்கும் இந்த மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.