நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைக்கேடு நடந்திருப்பதாகவும், 146 வீடுகள் கட்டாமலேயே கணக்கு காட்டி பயனாளிகள் பெயரில் அதிகாரிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2016 முதல் 2020 வரை அதிமுக ஆட்சி காலத்தில் ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் இல்லாத போது தனி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மேற்பார்வையில் ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் குடிசை வீட்டில் வசித்தவர்களை பயனாளிகளாக தேர்வு செய்து கான்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் அப்போதிருந்த மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறைசார்ந்த விசாரணைகள் நடைப்பெற்று வந்தது.
இந்த நிலையில் கீழ்வேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூர், கோவில்கண்ணாப்பூர், தெற்குபனையூர், வலிவலம் ஊராட்சிகளில் சுமார் 146 வீடுகள் முறைக்கேடு நடந்ததாக கண்டறியப்பட்டது.
புகார் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ஆதமங்கலம் ஊராட்சியில் கட்டப்பட்ட 49 வீடுகளை மயிலாடுதுறை பொதுப்பணித்திறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் அருள்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் ஈடுப்பட்டனர்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் பெயரில் வீடுகள் கட்டப்பட்டுள்ளாதா என ஆய்வு செய்ததில், பல வீடுகள் போலியாக பயனாளிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் பெயரில் வீடுகள் கட்டப்பட்டது போல் காண்பித்து பணம் கையாடலில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
அப்போது ஆதமங்கலத்தைச் சேர்ந்த சமுத்திரவேல் என்பவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு அனுமதி கிடைத்தது, ஆனால் மேலும் மூன்று வீடுகள் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான தொகை எனது வங்கி கணக்குக்கு வரவில்லை அதை யார் எடுத்தார்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை, ஆனால் எனது வீட்டை வந்து அவ்வப்போது அதிகாரிகள் படம் எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்து ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ள ஒழிப்புதுறையினர் எத்தனை வீடுகள் போலியாக கட்டாமல் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு பணம் கையாடல் செய்துள்ளார்கள் என விசாரணையில் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.