‘புளூவேல்’ விளையாட்டிற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு
புளூவேல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புளூவேல் ஆன்லைன் விளையாட்டின் தாக்கம் சமீபத்தில் இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த விளையாட்டினை விளையாடி இளைஞர்கள் சிலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
இதனை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் காவல்துறையினர் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இளைஞர்களை மரணத்திற்கு இட்டுச் செல்லும் இந்த விளையாட்டை உடனடியாக தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.எஸ்.பொன்னையா தாக்கல் செய்த இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனு விசாரணை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. மனு செப்டம்பர் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின், புளூவேல் விளையாட்டின் ஆபத்தினை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வுகளை பரப்புவதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மத்திய அரசு இதுவரை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.