ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நெறிமுறைகள் என்ன? 

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நெறிமுறைகள் என்ன? 
ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நெறிமுறைகள் என்ன? 
Published on

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் முன்பாக கடைபிடிக்கப்பட வேண்டியவை குறித்து உச்சநீதிமன்றம் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதற்கு முன்பாக பின்பற்ற பட வேண்டிய விதிமுறைகளை, உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டே வகுத்துள்ளது. அதன்படி ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் நில உரிமையாளர்கள் குறைந்தபட்சம், 15 நாட்களுக்கு முன் அந்த நிலம் அமைந்துள்ள கிராமத்தின் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு சார்ந்த அல்லது தனியார் என எந்த நிறுவனமாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும் இடத்தில், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனம் மற்றும் நிலத்தின் உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் அடங்கிய பதாகை வைக்கப்பட வேண்டும்.

ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடக்கும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பாக முள்வேலி அமைக்கப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட பின், கிணற்றின் முகப்பை சுற்றி அரை மீட்டர் அளவுக்கு கான்கிரீட்டாலான மேடை அமைக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியின் போது ஊழியர்‌கள் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியைச் செய்பவர்கள் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

துளையிடும் பணியை இடையில் நிறுத்தி வைத்தால் அந்தக் கிணற்றை மூடி வைக்க வேண்டும். இடைவேளை நேரத்தில் எக்காரணம் கொண்டும் திறந்த கிணற்றை விட்டுவிட்டு பணியாளர்கள் விலகிச் செல்லக்கூடாது. கிணறு தோண்டிய பிறகு சேற்றை அகற்றி நிலத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஆழ்துளைக் கிணற்றின் துவாரத்திற்கு உறுதியான இரும்பு தகட்டினால் மூடி பொருத்தப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி முடிவடைந்த பின், அந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளம் மற்றும் வடிகால்கள் நிரப்பப்பட்டு, சமன் செய்யப்பட வேண்டும்.

ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலோ, அந்தக் கிணறு தேவையில்லை என முடிவு செய்தாலோ, கிணறு முழுவதும் மண், மணல் மற்றும் கற்கள் போன்றவற்றால், நிரப்பி மூட வேண்டும்.

ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி முடிவடைந்தவுடன், அந்த இடம் பணி ஆரம்பிக்கும் முன் இருந்த, நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணற்றின் குழாய் பழுதடைந்து, வெளியே எடுக்கப்பட்டால் அந்தக் கிணறு மூடப்படாமல் இருக்கக் கூடாது. அவ்வாறு செய்யப்படாத கைவிடப்பட்ட கிணறுகளால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இந்திய தண்டனைச் ‌சட்டம் 304 பிரிவு இரண்டின் கீழ் கொலை அல்லாத மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக நில உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com