பட்ட பகலில் மிகப் படுபயங்கரமாக நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவரான சுப்பையா, கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் மற்றும் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஐய்யப்பன் என்பவர் அப்ரூவர் ஆகினார்.
இந்த வழக்கில் கடந்த 2015ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. 2017ல் சாட்சிகள் விசாரணை துவங்கியது. இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சுப்பையாவின் உறவினராக மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை ஜூலை 2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.
அதன்படி விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கிய சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
இதில், பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேவேளையில் அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.
இதனைதொடர்ந்து குற்ற வாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு குற்றச்சாட்டப்பட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பிலா எம் திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது.
இது குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்.. ”பட்ட பகலில் மிகப் படு பயங்கரமாக நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது ? ...இது போன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை..
வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதால்தான் விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியிருந்தது. ஆனால், அதை மாற்றி உள்ள சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்தது எப்படி? என புரிந்து கொள்ள முடியவில்லை.” என்றது. இந்நிலையில், மனு தொடர்பாக குற்றவாளிகள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்ததுள்ளது.