தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்த தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விவரங்களைப் பார்க்கலாம். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையே தேர்தல் பத்திரங்கள். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை எந்தவொரு குடிமகனும் அல்லது எந்தவொரு நிறுவனமும் எஸ்.பி.ஐ. வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் வாங்கலாம்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும், தங்கள் அடையாளத்தை வெளியிடாமல், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கலாம். இப்படி இருந்த தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தேர்தல் பத்திர முறை சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தேர்தல் பத்திர விற்பனை குறித்த அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் பதிவேற்ற உத்தரவிட்டது. அதன்படி அந்த தகவல்கள், கடந்த மார்ச் 14 ஆம் தேதி தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்த தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எஸ்.பி.ஐ. நிர்வாகத்திடம் புதிய தலைமுறை சார்பில் கேட்கப்பட்டது.
மார்ச் 13 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்ட அந்த மனுவில், மொத்தம் எத்தனை தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகின ? ஆண்டுவாரியாக எத்தனை தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகின ? எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் பெற்றுள்ளன? எந்தெந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன? என்பன உள்ளிட்ட ஆறு கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த RTI மனுவுக்கு கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி எஸ்.பி.ஐ. நிர்வாகம் பதில் அளித்துள்ளது. மொத்தம் விற்பனையான தேர்தல் பத்திரங்கள், ஆண்டு வாரியாக விற்பனையான தேர்தல் பத்திரங்கள் என்ற 2 கேள்விக்கான விவரங்களை மட்டுமே எஸ்.பி.ஐ. அளித்துள்ளது. மற்ற விவரங்களை தர இயலாது என்றும் எஸ். பி.ஐ. நிர்வாகம் பதிலளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான தகவல் கேட்கப்பட்டிருந்தும், அதற்கும் பதில் அளிக்க மறுத்துள்ளது.
இதுபற்றி சட்ட வல்லுநரும் ஆர்.டி.ஐ. ஆர்வலருமான பிரம்மாவிடம் கேட்டோம். அப்போது, ”ஒரு தகவலை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டு, பொது இணையதளத்தில் பதிவேற்றிய பிறகும் அதை தர முடியாது என எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்திருப்பது ஆர்.டி.ஐ. விதிகளுக்கு எதிரானது. இந்த பதிலை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ” என்று பிரம்மா குறிப்பிட்டார். நீதிமன்றம் செல்லவில்லை எனில், தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளி உலகத்திற்கு தெரியாமலே போயிருக்கும் என்பது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அளித்துள்ள ஆர். டி. ஐ. பதில் மூலம் அம்பலமாகியுள்ளது.