கடம்பூர் மலைப்பகுதியில் ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தை மலை கிராம மக்கள் கடந்து செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடம்பூர் மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளில் செந்நிற மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக மாக்கம்பாளையம், கோவிலூர், கோம்பை தொட்டி, அரிகியம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வன கிராமங்களில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், வனப்பகுதியில் உள்ள காட்டாற்றை மலைக்கிராம மக்கள் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் நீரில் இறங்கி கடந்து செல்கின்றனர்.
காட்டாற்றில் ஓடும் நீரில் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்வதால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது. இந்த இரு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டி தரவேண்டும் என கடம்பூர் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.