கடம்பூர் மலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் பழங்குடியின பெண்ணுக்கு, சுகப்பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி மலைப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி பரமேஸ்வரி. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பரமேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள குன்றி கிராமத்தில் போக்குவரத்து வசதியில்லாத நிலையில் இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் மற்றும் மருத்துவ உதவியாளர் வெள்ளியங்கிரி ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கடம்பூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கடம்பூர் மலைப்பாதை மல்லியம் கோயில் அருகே செல்லும்போது பரமேஸ்வரிக்கு அதிக வலி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மருத்துவ உதவியாளர் வெள்ளியங்கிரி, பரமேஸ்வரிக்கு பிரசவம் பார்த்தில் அழகிய ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர்.