வேலூரில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வதால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் இன்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் திருமாவளவன், வைகோ ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலூரில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ரூ. 89 லட்சம் மதிப்புள்ள 2.89 கிலோ தங்கமும், ரூ. 5.7லட்சம் மதிப்புள்ள 13.8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.