எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று 28 கட்சிகள் ஒன்றிணைந்த ‘INDIA’ கூட்டணியும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழத்தில் குறிப்பிட்ட இடங்களையாவது பிடிக்க வேண்டும் என்று பாஜக கணக்குப்போட்டு வருகிறது. இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் எப்படியும் நடிகர்களின் ஆதரவை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, யாருக்கும் ஆதரவாக பேசுவாரா என்றும் பேச்சு எழுந்த வண்ணம் இருக்கிறது.
2021ம் ஆண்டே தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி தரப்பு அறிவித்துவிட்டாலும், யாருக்கும் ஆதரவு தருவாரா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், ரஜினியின் அரசியல் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை. அவர் எந்த கட்சியிலும் சேரப்போவதுமில்லை. விரைவில் நடிகர் சங்கத்திற்கு நிதி கொடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.