சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.
அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தப்போது திடீரென பட்டாசு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வனராஜா என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவர் 80 சதவிகிதம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் உயிரிழப்பு 20ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 17 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே பட்டாசு விபத்து நடந்த ஆலைப்பகுதி மற்றும் மற்றொரு ஆலையில் வருவாய்த்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது இரு ஆலைகளுக்கு இடையேயுள்ள இடைவெளி, பட்டாசு தயாரிப்பு மருந்துகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. இதனையடுத்து விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.