சாத்தாக்குளம் தந்தை- மகனின் இறப்பிற்கு காரணம் கடுமையான காயங்கள் என உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தைச் சேர்ந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். ஜெயராஜ் பென்னிக்ஸ் மீதான தட்டச்சு செய்யப்பட்ட புகாரில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கட்டாயபடுத்தியதன் பெயரில், உயர் அதிகாரி கூறுவதை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் நானும் கையெழுத்திட்டேன். அதைத்தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இதேபோல காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோரும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன், முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை காவலர் முருகன் தரப்பில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தயார் செய்த புகாரில் கையெழுத்திட்டதை தவிர வேறு எந்த தவறையுன் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. தாமஸ் பிரான்சிஸ் தரப்பில், " காவல் நிலையத்தில் கணினி ஆப்பரேட்டராக பணியாற்றிய நிலையில், வேறு எந்த செயலிலும் ஈடுபடவில்லை" என தெரிவிக்கப்பட்டது. முத்துராஜ் தரப்பில்," இருவர் மீதான புகாரில் சாட்சியாக கையெழுத்திட்டதை தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை" ஆகவே இந்த வழக்கில் மூவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
சிபிஐ தரப்பில், "ஜூன் 19 ஆம் தேதி ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில், 22, 23 ஆம் தேதிகளில் முறையே பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் உயிரிழந்துள்ளனர். பென்னிக்ஸ் வீசிங் பிரச்சனை காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 22 ஆம் தேதி இரவு உயிரிழந்துள்ளார். அவரது உடற்கூராய்வு அறிக்கையில், கடுமையான காயங்கள் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பென்னிக்ஸ் உடலில் 13 காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது " என தெரிவிக்கப்பட்ட்து.
மேலும் “ஜெயராஜ் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு 22ஆம் இரவு 10 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 23 ஆம் தேதி அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடற்கூராய்வில், உடலில் 17 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவரது இறப்பிற்கான காரணமும் கடுமையான காயம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60பேரிடம் விசாரித்த நிலையில், சிபிஐ தற்போது வரை 35 பேரிடம் விசாரித்துள்ளது. கொரோனாவால் விசாரணை அதிகாரிகள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட நிலையில், விசாரணை இன்னமும் முழுவதுமான முடியவில்லை. மூவரும் ஜெயராஜ்-பென்னிக்ஸின் மரணத்தில் தொடர்புடையவர்களாக உள்ளனர். ஆகவே மூவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில்," காவல்துறையினர் தாங்கள் செய்த தவறை மறைக்கும் வகையில் பொய்யான காரணங்களைக் கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கினால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். ஆகவே, ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, சிபிஐயின் வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் தற்போது ஜாமின் வழங்குவது இயலாது என தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுக்களை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.