சிறை தண்டனை காலம் முடிந்து சசிகலா இன்று தமிழகம் புறப்படும் நிலையில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே அவர் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் அதிமுக அலுவலகம், ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடிந்து கடந்த 27-ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, மருத்துவர்கள் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். நாளைய தினம் அவர் தமிழகம் வருகிறார். ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது அதிமுக கொடி பொருத்திய ஜெயலலிதாவின் காரில் சசிகலா பயணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழகம் திரும்பும் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என டிஜிபி அலுவலகத்தில் இரண்டு முறை அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு முயற்சிப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், சசிகலாவின் வருகையை கண்டு அதிமுக அமைச்சர்கள் அஞ்சுவதாக விமர்சித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த அதிமுகவினர் திட்டமிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே சசிகலாவுக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை 5 மண்டலங்களாக பிரித்து வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் குவிவார்கள் என்றும் அமமுக கூறியுள்ளது. இது ஒரு புறமிருக்க அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பொது அமைதியை பாதிக்கும் நோக்கில் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தது நினைவுகூரத்தக்கது