தலைமைப் பதவியை அடித்து பிடிக்க முடியாது எனவும், தலைமைப் பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது, சட்டப்படியும் செல்லாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடந்த இரண்டு வார காலமாக ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாகி வந்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் நீதிமன்ற படியேறினார். இதனை எதிர்த்து ஈபிஎஸ் அணியினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தநிலையில் இன்று சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
இதற்கிடையே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகளுடன் வந்த கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தார். இந்நிலையில், தலைமைப் பதவியை அடித்து பிடிக்க முடியாது எனவும், தலைமைப் பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது, சட்டப்படியும் செல்லாது என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது. தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்த பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது.
சட்டத்திற்கு புறம்பான தலைமையை தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. இருபெரும் தலைவர்களின் ஆசியால் இந்த இயக்கம் மீண்டும் அதே பொலிவோடு மீண்டெழும். நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களின் பின்னால் குதிரைகள் கூட செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது. காட்சிகள் மாறினாலும் கொள்கைகளை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு நிஜத்தை நிச்சயம் அடைவோம். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை பொருளாளரே அறிவிக்க முடியும். அப்படி இருக்கையில் இது எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது.