செப்டம்பர் 2017-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் செல்லாது என அறிவிக்கும்படி சசிகலா தரப்பு தொடுத்த வழக்கை, நிராகரிக்கக்கோரி எதிர்த்தரப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலா தரப்பு மீண்டும் அவகாசம் கோரியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டமொன்று நடைபெற்றது. அதன்முடிவில், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் டிடி.வி தினகரன் துணைப் பொதுச்செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றார். அதன் பிறகு கடந்த 2017 செப்டம்பரில் அதிமுக பெயரில் மற்றொரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலா, தினகரனை பொதுச்செயலாளர் - துணைப் பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து நீக்கியது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டம் செல்லாது என்றும், இதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் மனுத்தாக்கல் செய்தனர்.
எதிர்த்தரப்பினர் (அதிமுக நிர்வாகிகள்) தரப்பில் அந்த வழக்கை நிராகரிக்கக்கோரி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் தரப்பு தாங்கள் அளித்த வழக்கை வாபஸ் பெற்றனர். இருப்பினும் சசிகலா தரப்பு, வழக்கை தொடர்ந்து நடத்துவதாக உறுதியாக கூறினர். தொடர்ந்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க சசிகலா தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டிருந்தது. சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க வழக்கு விசாரணையை, ஜூலை 30-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.