எப்போதும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதாக நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
14வது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இத்தனை ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பது இதுவே முதல்முறை. சென்னையில் திருவையாறு தொடக்க நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வாநாதனின் மெழுகு சிலையை முதல்வர் திறந்து வைத்தார். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடல் மற்றும் மனதை வளப்படுத்துவது இசை எனவும் நாட்டுப்பற்றை வளர்க்கவும், கொள்கைகளை கொண்டு சேர்க்கவும் இசை உதவுவதாகவும் தெரிவித்தார்.
இசையை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்த உதவும் இசைக்கலைஞர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகை சரோஜாதேவி, “எத்தனையோ முதலமைச்சர்களை நான் பார்த்துள்ளேன். தற்போதைய முதலமைச்சர் முகத்தில் நல்ல ஒரு புன்னகை உள்ளது. கலைஞர்களுக்கு கவுரவம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிறைய ஏழைகளுக்கு எம்.ஜி.ஆர் போல உதவி செய்ய வேண்டும். எப்போதும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.