அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததற்கும் செக் மோசடி வழக்குக்கும் சம்பந்தம் கிடையாது என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் ஓராண்டு சிறை தண்டனையும், 2 வழக்குகளில் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய ‘மேஜிக் ப்ரேம்’ நிறுவனம் 2014ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1.5 கோடியை பெற்றுவிட்டு, திருப்பிக்கொடுத்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது ஆதாரங்களின் வாயிலாக உறுதிப்படுத்தப்படவே சரத்குமாருக்கு ஒரு வருடம் சிறைதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு சரத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம் அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவந்ததால் இது ஓர் அரசியல் சூழ்ச்சியா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘’இதை அரசியல் சூழ்ச்சி என்று கூறி நான் தப்பிக்க விரும்பவில்லை. சட்டத்தை மதிப்பவன் நான். என்னை பொருத்தவரைக்கும் இது சரியான தீர்ப்பு கிடையாது. இது செக் மோசடி வழக்குக் கிடையாது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவந்ததற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அப்படி சொல்லி நான் நழுவ பார்க்கவில்லை. இதை சட்டரீதியாக தீர்த்துக்கொள்வோம்’’ என்று சரத்குமார் பதிலளித்தார்.