அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், “பாஜகவின் குடும்பம் பெரிதாகியுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு நடிகராக எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்றால் அது சரத்குமார்தான். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்தன்மையாக நடக்கக்கூடிய ஒரு கட்சி. இக்கட்சியின் அறிக்கையை நான் விரும்பி படிப்பேன்.
மற்ற அரசியல் தலைவர் எல்லோரும் கூட்டணியின்போது பேரம் பேசுவார்கள். நான் வந்தால் எனக்கென்ன லாபம் என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால், சரத்குமார் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது பேசியதெல்லாம் ‘நான் வந்தால் மோடிக்கு என்ன லாபம், நாட்டிற்கு என்ன லாபம்’ என்பதுமட்டுமே.
இந்நிலையில் நேற்றிரவு 2 மணிக்கு எனக்கு அழைத்து பேசினார் சரத்குமார். ‘நான் மற்ற அரசியல் கட்சிபோல் இருக்கக்கூடாது. அதனால் நான் கனத்த இதயத்தோடு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பிரதமர் மோடியுடன் இணைத்து 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பாடுபடப்போகிறேன்’ என சொன்னார்.
சரத்குமாரின் முடிவு எளிதான முடிவல்ல. இது கடுமையான முடிவு. தமிழ்நாட்டு அரசியலில் ஒரு கட்சி நடத்துவது என்பதே பெரிய விஷயம். எல்லாம் பண முதலீடு. இதற்கு மத்தியில் கட்சியை நடத்தியது மிகப்பெரிய விஷயம்” என தெரிவித்தார்.
இதன்பின் பேசிய சரத்குமார், “ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது பத்திரிகையாளர்கள், இயக்கத்தின் சகோதரர்கள், பிற கட்சியினர் என யாராக இருந்தாலும் எத்தனை சீட் நிற்கப்போகிறீர்கள், யாருடன் கூட்டணி என்றுதான் கேட்பார்கள். கூட்டணி, சீட் என டிமாண்ட் வைப்பது மட்டும்தானா அரசியல்?
மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்ற கொள்கை இதில் அடிபட்டுவிடுகிறதே... நாமும் அந்த வழியில்தான் செல்ல வேண்டுமா, வலிமையான பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என்று எனக்கு தோன்றியது. நள்ளிரவிலும் அழைத்து அண்ணாமலையிடம் இதை தெரிவித்தேன். ஏற்கெனவே பாஜக உடன்தான் இந்த தேர்தலை சந்திக்க இருப்பதாக சொன்ன நாங்கள், பாஜகவுடன் இப்போது முழுவதுமாக இணைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.