வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
அதில், "கல்லிடைக்குறிச்சி பகுதியில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஓடை தடுப்பணை உள்ளது. இந்த வழியாக செல்லும் ஓடை நீர் 5 கி.மீ. தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றில் சென்று கலக்கும். ஓடை தடுப்பணை நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க காரணமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த பகுதியில் கேரளாவைச் சேர்ந்த மனுவல் ஜார்ஜ் என்பவர் எம் சாண்ட் குவாரி அமைப்பதற்காக அனுமதி பெற்றுள்ளார். அதாவது, கடினமான பாறைகளை உடைத்து எம்.சாண்ட் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் கல்லிடைக்குறிச்சியின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையோடு சட்டவிரோதமாக மணலை அளவுக்கு அதிகமாக எடுத்து விற்பனை செய்து வருகிறார். நாள்தோறும் இரவு நேரங்களில் 200 முதல் 300 லாரிகளில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதனால் இந்த பகுதியில் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே இப்பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை ஆய்வு செய்ய, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து மண் எடுப்பது குறித்து ஆய்வு செய்து தடுக்கவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, "மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும், அதனை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. அந்த பகுதி வருவாய் மற்றும் காவல்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடைபெற வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கவும், மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியே பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.