திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் இரண்டாவது நாளாக நடத்தி வந்த போராட்டத்தை அப்பகுதி மக்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
திருப்பூ மாவட்டம், சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் மீதும் காவல்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்திலும் அறைந்தார். காவல் துறையினரின் இந்த அராஜக போக்கைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்ந்தது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை இன்று அதிகாலை கைது செய்த காவல்துறையினர் அவர்களை மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய கூடுதல் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.