சேலம் அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 19 ஆம் தேதி இரவு, மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சிவசக்தி, தலைமை காவலர் செந்தில்குமார் ஆகிய இருவரும் மது போதையில் உணவருந்தச் சென்றுள்ளனர். இதில், ஒருவர் உணவருந்திவிட்டு மேஜையிலேயே தூங்கிவிட மற்றொருவர் காருக்குள் சென்றுவிட்டார்.
இந்நிலையில், ஊழியர்கள் கடையை அடைக்க மேஜையில் தூங்கியவரை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர், இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு எழுந்துள்ளார். இதனையடுத்து உணவு அருந்தியதற்கான பணம் கொடுக்காமல் ரவுடியை போல், சிவசக்தி செந்தில்குமார் ஆகிய இருவரும் உணவக உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார், சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து உதவி ஆய்வாளர் சிவசக்தி தலைமை காவலர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் உத்தரவிட்டார். மேலும் இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.