செய்தியாளர்: ஆர்.ரவி
“இங்க தமிழ் ஆசிரியை யாருமா... திருக்குறளுக்கு அர்த்தம் சொல்லுங்க " என ஆட்சியர் கேட்ட ஒற்றை கேள்வியால் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் விழிபிதுங்கி நின்றனர்.
சம்பவத்தின்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 'உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின்' கீழ் மலை கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார்.
அப்போது வாழப்பாடி அருகே உள்ள அருநூத்துமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அரசுப்பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்த மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரிடம் திருக்குறள் ஒன்றை கூற சொல்லி விளக்கம் கேட்டார். அந்த மாணவி சரியான விளக்கம் தெரியாததால் அமைதியாக நின்றுள்ளார். அடுத்த வினாடியே ஆட்சியர் கேட்ட ஒற்றை கேள்விதான் அங்கிருந்த ஆசிரியர்களை சற்று பதற வைத்தது.
அதன்படி ஆசிரியர், "தமிழ் ஆசிரியர் யாருமா? அந்த குறளுக்கு நீங்களே விளக்கம் கொடுங்கள்" என கூறினார். ஆசிரியை கொடுத்த விளக்கத்தில் சிறிய பிழைகள் இருந்ததால், மீண்டும் ஆசிரியையிடம் அடுத்த கேள்வியை கேட்டு “சரியான விளக்கம் கொடுங்கள்” என கூறினார்.
அப்போது, அங்கிருந்த ஆசிரியர்கள் பலரும் அடுத்தது நம்மிடம் கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த சில மாணவர்கள் ஆட்சியர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்ததால், ஆசிரியர்களிடம் சரமாரி கேள்வி கேட்டார் ஆட்சியர். அதுமட்டுமின்றி, “20, 25 வயதில் அரசு வேலை வாங்கி விட்டு 30 ஆண்டுகள் ஆர்வம் இல்லாமல் பணி செய்தால் எதற்கு அந்த வேலை?” என கடிந்து கொண்டார் ஆட்சியர் பிருந்தா தேவி.
தமிழ் ஆசிரியையிடம் மாவட்ட ஆட்சியர் கேள்வி கேட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதை இங்கே காணலாம்: