செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை பகுதியைச் சேர்ந்த மஹாதிர் முஹமத் (36). தாதுபாய்குட்டை பகுதியில் உதிரிபாக கடை வைத்துள்ளார். மேலும் குகை ஆற்றோர வடக்கு தெருவில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றையும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அனைவரும் உடற்பயிற்சி செய்துவிட்டு சென்ற நிலையில், அவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். பின் அவர், நீராவி குளியல் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு 9 மணியளவில் அவரது தாய் போன் செய்துள்ளார். ஆனால், போனை எடுக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது குளியல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து மஹாதிர் முகமதுவை மீட்டபோது, அவரது காதில் ரத்தம் வந்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஹரிசங்கரி நேரில் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மஹாதிர் முஹமத்-க்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளதும், அளவுக்கு அதிகமாக அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.