செய்தியாளர்: எஸ்.மோகன்ராஜ்
சேலம் அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் புஷ்பாஞ்சலி நாட்டிய கலாலயா சார்பில் 20-வது ஆண்டு நடனாஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சேலத்தின் நாட்டிய சகோதரிகள் தனலட்சுமி, ரேகா ஆகியோரிடம் பரதநாட்டியப் பயிற்சி பெற்ற மாணவிகள் 110 பேர், ஒரே நேரத்தில் மேடையில் தோன்றி நடனமாடி அசத்தினர். நான்கு வயது குழந்தை முதல் திருமணமான பெண்கள் வரை கலந்து கொண்ட இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
மாநிலங்களின் பாரம்பரிய கலையின் பெருமையை பறைசாற்றும் நடனம், தெய்வ வழிபாட்டு நடனம், குருவை வணங்கும் நடனம் என பல்வேறு வகையான நடனங்களை அபிநயத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்த்திக் காட்டினர். இந்நிகழ்வில் நாட்டிய குறிஞ்சி விருது பெற்ற லதா மாணிக்கம், சின்னத்திரை நடிகை ஹரிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை முடித்த கையோடு வந்து நடனமாடிய மாணவி மயூரிகாவின் நடனம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.