சேலம் மாநகர மக்கள் நல அலுவலர் பிரபாகரன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
சேலம் மாநகர மக்கள் நல அலுவலராக கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பிரபாகரன் நியமிக்கப்பட்டார். தமிழகத்திலேயே சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதால், சுகாதாரத்துறையினர் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது பதவியை சேலம் மாநகர மக்கள் நல அலுவலர் பிரபாகரன் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான பதவி விலகல் கடிதத்தை சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பதவியில் தொடர இயலவில்லை என்று அவர் தனது பதவி விலகலை ஏற்கும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டெங்கு ஒழிப்பு பணிக்கான நெருக்கடியால் ஏற்பட்ட மனஉளைச்சலே, பிரபாகரனின் ராஜினாமாவுக்கு காரணம் என கூறப்படுகிறது.