ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி வட்டாரத்தில் சட்டவிரோதமாக கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் சீசன் துவங்கியுள்ள நிலையில் குடிமகன்களின் கூட்டமும் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், சட்டவிரோத கள்ளுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சரகத்தில் ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, தொளசம்பட்டி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த பகுதிகளில் குடிமகன்களின் கூட்டம் காலையிலும் மாலையிலும் குவிகிறது.
ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பல்பாக்கி, கோட்டை மாரியம்மன்கோவில், பச்சனம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தீவட்டிப்பட்டி, நடுப்பட்டி, காடையாம்பட்டி, தாரமங்கலம், சிக்கம்பட்டி, கே.ஆர்.தோப்பூர், கோணகாபாடி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக பனைமரத்தில் இருந்து கள் பானம் இறக்கப்படுகிறது.
அதனால், குடிமகன்கள் இந்த பகுதிகளில் சென்று அதிக விலை கொடுத்து கள்பானத்தை குடித்து வருகின்றனர். தமிழக அரசு கள் இறக்கவும் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ள நிலையில் பனைமர கள் பானம் குடிப்பதற்காக கூட்டம் கூடுவதால் கிராம மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. அதனால், பனைமர கள் இறக்குவதை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூர் உட்கோட்ட போலீசார் கள் இறக்கி விற்பனை செய்வதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து கலப்பட கள்ளுக்கடைகளும் திறக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதேபோல கிராமங்களில் அடிதடி பிரச்னைகளும் அதிகரித்துள்ளது. அதனால், கள்ளுக்கடை விற்பனையை தடுக்க போலீசார் பெயரளவில் நடவடிக்கை எடுக்காமல், கடுமையான நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.