சேலத்தில் தனியார் குடிநீர் நிறுவனங்கள் தரமற்ற குடிநீரை விநியோகிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் வட்டார கிராமங்களில் தற்போதே வெயிலின் தாக்கம் துவங்கி விட்டது. இப்போதே அங்கு வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது. பருவமழை சரிவர பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. தண்ணீருக்கு மக்கள் அலைய வேண்டிய நிலையில் உள்ளனர். குடிநீர் தேவையும் அதிகமாகி விட்டது. இதை பயன்படுத்தி தனியார் மினரல் வாட்டர் வாகனங்கள் அதிக அளவில் தண்ணீர் விநியோகம் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், இந்தக் குடிநீர் மூன்று நாட்களுக்கு மேல் தாங்குவதில்லை. அதற்குமேல் அவற்றை வைத்திருந்தால் புழுக்கள் வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மினரல் குடிநீரை ஒரு குடம் பத்து ரூபாய்க்கு விநியோகம் செய்தும், அதன் தரம் கேள்விக்குறியாக உள்ளது. இவைகளில் எத்தனை வாகனங்கள் அனுமதி பெற்று இயங்குகின்றன என்பதும் தெரியவில்லை. ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில்100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மினரல் வாட்டர் விநியோகம் செய்கின்றனர். ஒருசில தனியார் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தினால் சளி, இருமல் போன்றவை ஏற்படுகின்றன என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து தனியார் குடிநீர் வாங்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகளை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையும் ஆய்வு செய்து தரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா ? என்பதை கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும், உள்ளாட்சி நிர்வாகங்கள் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முறையாக, சீராக வழங்கினாலே இதுபோன்ற பிரச்னைகள் வராது என்றும் மக்கள் கூறுகின்றனர். சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.