முடியாத மூதாட்டிக்கு இப்படியொரு அவலம்..!

முடியாத மூதாட்டிக்கு இப்படியொரு அவலம்..!
முடியாத மூதாட்டிக்கு இப்படியொரு அவலம்..!
Published on

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வந்த மூதாட்டியை தரையில் கிடத்தி வைத்த அவலம் சேலத்தில் நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், மருத்துவகாப்பீட்டுக்கு பதிவு செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள காட்சிகள் காண்போரை அதிர வைக்கின்றன.

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு. வீட்டில் வழுக்கி விழுந்ததில் இவருக்கு இடுப்பெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இடுப்பெலும்பு முறிந்ததன் காரணமாக இவரால் நடக்கவும், உட்காரவும் முடியாத நிலை உள்ளது.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டியின் ஏழ்மை நிலையை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து எடுத்து கூறியுள்ளனர். இதனையடுத்து அலமேலுவின் உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு சென்று மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அதற்கான சேவை மையத்தை அணுகினர். ஆனால், பயனாளி நேரடியாக வரவேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு மூதாட்டி கொண்டு வரப்பட்டார். 

ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் சேவை மையமானது மாடியில் இயங்கி வருகிறது. மூதாட்டிக்கு இடுப்பெழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவரால் நடக்க முடியாது என அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மாடியில் உள்ள சேவை மைய அறைக்கு மூதாட்டியை அழைத்துவரச் சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து  உறவினர்களே மூதாட்டியை கைகளில் தூக்கிக்கொண்டு சென்றனர். அங்கு வெறும் தரையில் கிடத்தப்பட்ட மூதாட்டியை புகைப்படம் எடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இடுப்பெலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை வெறும் தரையில் கிடத்தி புகைப்படம் எடுத்தது பற்றி எந்த குற்ற உணர்வும் அங்கிருப்பவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.

நடக்கவோ, உட்காரவோ முடியாத நிலையிலிருந்த மூதாட்டியின் நிலைகுறித்து எடுத்து கூறியும், அவரை அலைக்கழித்த அவலம் காண்போரை வேதனையில் ஆழ்த்தியது. இதுபோன்று சூழ்நிலைகளில் தகுந்த மாற்று ஏற்பாடு செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com