காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள வன கிராமத்தில் கள்ளத்தனமாக வைத்திருந்த 20 நாட்டு துப்பாக்கிகளை வனத்துறை மூலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள டேனிஷ்பேட்டை வனச்சரக எல்லைக்குட்பட்ட கண்ணப்பாடி மலை கிராமத்தில் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதையடுத்து கள்ளத் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த, சேலம் மாவட்ட வன அலுவலர் குமார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் ஆலோசனைகள் வழங்கினர். மேலும், கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி, தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாவதி ஆகியோர் தலைமையில் இரண்டு குழுவினரும் இணைந்து கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள், நேரடியாக வழங்க அச்சமாக இருந்தால், ஊரில் உள்ள பொது இடத்தில் வைத்துவிடுமாறு அறிவுறுத்தினர். அவ்வாறு கள்ளத் துப்பாக்கிகளை வைப்பவர்கள் மீது வனத்துறையோ, காவல்துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கண்ணப்பாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 20 கள்ளத் துப்பாக்கிகளை மலைகிராம மக்கள் வைத்துவிட்டுச் சென்றனர். இதையறிந்த டேனிஷ்பேட்டை வனச்சரகர் பரசுராமமூர்த்தி, தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாவதி மற்றும் குழுவினர், ஊர் பொதுமக்கள் முன்னிலையில், 20 கள்ளத் துப்பாக்கிகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து போலீசார் 20 நாட்டு கள்ளத் துப்பாக்கிகளையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.