“விரும்பியே பெற்றோருடன் சென்றேன், யாரும் கடத்தவில்லை” - நீதிமன்றத்தில் இளமதி வாக்குமூலம்

“விரும்பியே பெற்றோருடன் சென்றேன், யாரும் கடத்தவில்லை” - நீதிமன்றத்தில் இளமதி வாக்குமூலம்
“விரும்பியே பெற்றோருடன் சென்றேன், யாரும் கடத்தவில்லை” - நீதிமன்றத்தில் இளமதி வாக்குமூலம்
Published on

சேலத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளமதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் மற்றும் இளமதி ஆகியோர் கடந்த 9ஆம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகின. இளமதியின் குடும்பத்தினர் அன்றைய தினம் இரவு செல்வன் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஈஸ்வர் ஆகியோரை தாக்கிவிட்டு, இளமதியை காரில் அழைத்துச் சென்றிருந்தனர். இதையடுத்து இளமதியை அவரது பெற்றோர் கடத்திச் சென்றுவிட்டதாக செல்வன் மற்றும் ஈஸ்வர் ஆகியோர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளமதியின் தந்தை உட்பட 18 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி கடந்த 14ஆம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கறிஞருடன் வந்து சரண் அடைந்தார். அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், விருப்பப்பட்டு தான் பெற்றோருடன் சென்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில், காவல்துறையினர் இளமதியை சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி குமரகுரு முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது, தனது விருப்பப்படியே பெற்றோருடன் சென்றதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் நீதிபதியிடம் இளமதி வாக்குமூலம் அளித்தார். பின்னர் பெற்றோருடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com