ஓமலூர் ஒன்றிய திமுக உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஓமலூர் ஒன்றியம் முழுக்க போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்து ஓராண்டாகியும் திமுக வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டி, நூதன முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்திற்கு 27 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 2019-ல் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், திமுகவை சேர்ந்த குப்புசாமி, கோபால்சாமி, சிவஞானவேல், தேன்மொழி, தனசேகரன், செல்விராஜா, துரைசாமி, லலிதா, அருள்பாலாஜி, வசந்தாகுமார், சுமதி மணிவாசகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். ஆனால், ஓராண்டு முழுமையாக முடிந்த நிலையிலும் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் வார்டுகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவே இல்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. ஆனால், தினமும் ஒவ்வொரு பகுதிகளிலும் இரண்டு கோடி, மூன்று கோடி என்று பூமி பூஜை போடுகிறார்கள். ஆனால், அந்த பணிகள் எதுவும் செய்யப்படவில்லை, மக்களை ஏமாற்றும் வகையில் பூஜைகள் மட்டுமே போடப்பட்டு வருகிறது.
மேலும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க ஒன்றிய ஆணையாளர்களை சந்தித்து மனு கொடுத்தும் கோரிக்கை விடுத்தும் பயனில்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், திமுகவை சேர்ந்த 9 கவுன்சிலர்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து ஓமலூர் நகரம் மற்றும் ஒன்றிய கிராமங்கள் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மக்கள் பணிகள் எதுவும் செய்யாமல் இருக்க, நிதி எதுவும் கொடுக்காமல் புறக்கணிக்கும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை முடிந்து, இரண்டாம் ஆண்டு துவங்கியுள்ளது.
ஓமலூர் ஒன்றிய திமுக கவுன்சிலர்களுக்கு இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்காத தமிழக அரசுக்கு நன்றி என்று கூறி அனைத்து இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், ஓமலூர் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராம மக்களும் தங்கள் பகுதிக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் குடிநீர் இணைப்புகள் கூட வழங்கவில்லை என்றும் அதிகாரிகளிடம் கூறினாலும் நிதி வரவில்லை என்று கூறி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுப்பதாக புகார் கூறுகின்றனர்.