மேட்டூரை சேர்ந்தவர்கள் தங்கராஜ் - அபிராமி தம்பதியினர். இவர்களது மகள் தமிழினி (10), தனியார் பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இரண்டரை வயது முதலே கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இதன்மூலம் தமிழினி உலக அளவில் 230 கராத்தே போட்டியில் கலந்து கொண்டு 200 போட்டிகளில் முதல் பரிசை வென்றுள்ளார்.
அதில் கடந்த மாதம் நேபாளத்தில் நடைபெற்ற கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் முதல் பரிசை வென்றதும் ஒன்று. இவர் வென்ற பரிசுகளும், இளம் மாமணி பட்டங்களும், இந்தியா ரெக்கார்ட்ஸ் பதிப்புகளும் மேடையை அலங்கரித்தது. இந்நிலையில் இன்று மாதையன் குட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட், இந்தியன் அச்சீவர்ஸ் ஆப் ரெக்கார்டு உள்ளிட்ட 10 சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக அதிகாரிகள், கராத்தே மற்றும் சிலம்ப வல்லுநர்கள் முன்னிலையில் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் ,கராத்தே, வால் வீச்சு, சுருள் வீச்சு, மான் கொம்பு, சர்க்கரை பந்தம், கைப்பந்து ஆகிய தற்காப்பு கலைகளை செய்து அசத்தினார். நிகழ்ச்சியின் முடிவில் சிறுமி தமிழினிக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.