தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்று தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தற்போது நடைபெறவில்லை. தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் சேலத்தில் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆட்சியர் ரோகிணி, தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மாவட்ட ஆட்சிரியன் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. இதேபோல, மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தனித்துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் மனுநீதி முகாமும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளவரை நடைபெறாது என தெரிவித்துள்ளார்.