சேலம் ஓமலூர் அருகே வாலிபர் ஒருவர் பலத்த காயத்துடன் ரயில்வே டிராக்கில் விழுந்து கிடந்த நிலையில், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொலையா அல்லது தற்கொலையா என சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கர செட்டியபட்டி கிராமத்தின் வழியாக சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்வே இருப்பு பாதை உள்ளது. இன்று பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில், சக்கரசெட்டியபட்டி கிராமம் நாலுக்கால்பாலம் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் இருந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் சர்மிளா 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை செய்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரயிலில் அடிபட்டு கிடந்த வாலிபர் ஒடிசா மாநிலம் சுந்தர்காட் மாவட்டம், மந்தர்கோலா கிராமத்தை சேர்ந்த 23 வயது ராஜேந்திர சாகு என்பது தெரியவந்தது. மேலும், இவர் அங்கு என்ன தொழில் செய்கிறார், எதற்காக இங்கே வந்தார், ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கில் கீழே தள்ளி இருப்பார்களா அல்லது யாராவது கடத்தி வந்து தள்ளி விட்டிருப்பார்களா என்ற கோணத்தில் சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ஓமலூர் போலீசாரும், யாரவது கடத்தி வந்து அடித்து ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.