ஆழ்கடல் மீன்பிடிப்பில் பொதுவாக ஆண்கள்தான் ஈடுபடுவார்கள். இந்த நிலையை மாற்றி பெண்களும் கடலாடுகிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில். அவர்களின் துணிவை பதிவு செய்யும் தொகுப்பை, சர்வதேச பெண்கள் தினமான இன்று பார்க்கலாம்.
ராமேஸ்வரத்தை அடுத்த சின்னபாலம் மீனவ கிராமத்தில் ஏராளமான பெண்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துத் திரும்புகிறார்கள். வழக்கமாக ஆண்கள்தான் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து திரும்புவர். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட, ஒருவேளை உணவுக்குக்கூட சிரமப்படும் குடும்பங்களின் பசியாற்றுவதற்காகவும், குடும்பத்துக்காகவும், இந்த பெண்கள் கடலுக்குச் சென்று நண்டுகளை பிடித்துக்கொண்டு கரைசேர்கிறார்கள்.
பல சவால்களுக்கு மத்தியில் தீவுகளில் தங்கி மீன்பிடிக்கும்போது இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அதனையும் மீறி முல்லைத் தீவு, குருசடை தீவு, முயல் தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் மூன்று நான்கு நாட்கள் தங்கி இவர்கள் பிடித்துவரும் நண்டுகள்தான் இந்த குடும்பங்களின் பசியாற்றுகின்றன. மன வலிமையுடன் கடலோடி வாழ்க்கைப்படகு மூழ்காமல் இருக்க நங்கூரமிட்டு காக்கிறார்கள் இந்த கடல் தேவதைகள்.