இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிப்பதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில் சுகந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை தியாகி ராமுத்தேவர் குறித்து ஐ.ஏ.எஸ்.சகாயம் பேசினார். அதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இளைஞர்கள் சமூகத்தின் சொத்து. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. இளைஞர்கள் மதுவுக்கு அடிமை பட்டு போவது ஒரு சமூகத்திற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல. எங்களைப் போன்ற அதிகாரிகள் இது போல மதுவுக்கு அடிமையாகி உள்ள இளைஞர்களை மீட்டெடுக்க நினைக்கின்றோம். ஆற்றல் மிகுந்த இளைஞர்களை வலுவிழக்கச் செய்வது மதுபானம்.
நாட்டின் மீதும் மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது கவலை கொள்வது இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்து தான். வலிமையான கட்டியெழுப்பக்கூடிய சமூகத்தையும், நாட்டையும் பலவீனப்படுத்துவது தான் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பது. சமூக மாற்றத்திற்கான இயக்கமாக மக்கள் பாதை இயக்கத்தை பயன்படுத்தி வருகிறோம். தேர்தல், அரசியல் என்பது குறுகியது. ஆனால் நாங்கள் விரிந்த பார்வையோடு மக்கள் பாதை இயக்கத்தை நடத்தி வருகிறோம்.
அரசியலைத் தாண்டி மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்களை மக்கள் பாதையின் மூலம் செய்வோம். இளைஞர்கள் என்னை போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளை ஏன் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என நினைத்து பார்க்கிறேன். நாட்டில் எங்கும் ஊழல் அரசு நிர்வாகத்தில் ஊழல், சீர்கேடுகள் என்பதால் இளைஞர்கள் அரசியலுக்கு அழைக்கின்றனர்.
தூய்மைபடுத்தப்பட்ட தமிழ்ச் சமூகம் நிச்சயம் நேர்மையான அரசியலை உருவாக்கும் என்று நம்புவோம். மக்கள் பாதை இயக்கம் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டுள்ளது. 5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள் இளைஞர்கள். மிக வலுவான செயல்பாடுகளை சமூகத்தில் செயல்படுத்த மக்கள் பாதை இயக்கம் செயல்படும்” என தெரிவித்தார்.