ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணமடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்த உள்ளார்.
அருணாசலப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 16ஆம் தேதி) நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் நேற்றிரவு மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து நல்லடக்கம் செய்வதற்காக அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கிராமத்திற்கு ராணுவ வாகனத்தில் எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயமங்கலத்தில் வைக்கப்பட்டு பின் ராணுவ மரியாதையுடன் அங்குள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மரியாதை செலுத்த உள்ளார். மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்த்-ன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மறைந்த மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகத்திற்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் கூறுகையில்...
”அவர் ஒரே மகன். ஒழுக்கம் வர வேண்டும் என்பதற்காக அவரை தேசிய மாணவர் படையில் சேர்த்தேன். அதில் சாதித்ததால் முதல் படியிலேயே 2010-ல் ராணுவத்தில் சேர்ந்தார். வருத்தத்துடன் இருந்தாலும் பெருமையாக உள்ளது. நாட்டிற்காக நிறைய சாதித்துள்ளார். அதனால் திருப்தியாக உள்ளது. நேர்மையாக சேவையை விரும்பி செய்தார். ஆனால், விதி எங்களை பிரிந்து விட்டார்” என்று கூறினார்.