ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் 3 வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு எழுப்பியது. இதுதொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசை எதிர்த்து, பிளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை அமலாக்கப்பிரிவு இந்த நோட்டீசை அனுப்பியதால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இருந்தார். மனுவில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து தான் 2010ஆம் ஆண்டு விலகி விட்டதாகவும் தனக்கும் தற்போது நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பலமுறை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் 12 வருடங்கள் கழித்து தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனவே நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சச்சின் பன்சால் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி மகாதேவன் இதுகுறித்து 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.