எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? - உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி

எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? - உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி
எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? - உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி
Published on

பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவான கருத்தை பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு பதிவிற்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது ஆஜராகவும் விலக்கு அளித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை, ஆஜராக விலக்கு, வழக்கை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி மற்றும் தேசப்பற்று தொடர்பாக அனுப்புபவர் என்பதால், அதைபோல நினைத்து அவர் 2018 ஏப்ரல் 19ல் எழுதியதை பார்வேர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு என தெரியவந்ததால், உடனடியாக ஏப்ரல் 20ஆம் தேதியே நீக்கிவிட்டதுடன், உடனடியாக தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருந்ததாகவும் வாதிட்டார். தனிமனித ஒழுக்கமும், பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும், பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய பிறகும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதே விவகாரம் தொடர்பான புகார்களில் அம்பத்தூர் நீதிமன்ற வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றமும், கரூர், திருநெல்வேலி வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் விசாரணைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்தார். காவல்துறை தரப்பில் பெண்கள் குறித்து அவதூறாக பதிவான கருத்தை எஸ்.வி.சேகர் பதிவிடவில்லை என்றாலும், அதை பார்வேர்ட் செய்திருப்பதும் குற்றம்தான் என்பதால், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பினார். சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். பின்னர், எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்ய தடைவிதித்தும், வழக்கில் அவர் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16ஆம் தேதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com