தேசியக்கொடி அவமதிப்பு தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசியக்கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவினர் பதிவு செய்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் காவல்துறையின் விளக்கத்தைப் பொறுத்து முடிவு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தெரிவித்துள்ளது குறித்து, மனுதாரர் முடிவெடுத்து, அவரது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதனையடுத்து தேசியக் கொடியை அவமதித்து தொடர்பான முன் ஜாமீன் வழக்கில் வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். எதிர்காலத்தில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் எனவும் எஸ்.வி.சேகர் உறுதியளித்தார்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகர் காவல்துறையினரின் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கியது.