வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள மையத்தில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதல் காவல் பாதுகாப்பு அளிக்கப்படும் என புதிதாக பதவியேற்றுள்ள மதுரை ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்டோர் நுழைந்தது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக நாகராஜன் இன்று பதவியேற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியர் நாகராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பணியினை கவனமாக மேற்கொள்ள உள்ளேன். முழுக்க முழுக்க திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளேன் என்றார். திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான 9 தேர்தல் பறக்கும் படை உள்ள நிலையில் தேவைகளுக்கு ஏற்ப கூடுதலாக பறக்கும் படை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள மையத்தில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதல் காவல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.