துருப்பிடித்த மூடியுடன் கூடிய இருமல் மருந்தை வழங்கிய பவானிசாகர் அரசு மருத்துவமனை ஊழியர்களுடன், சிகிச்சைக்கு வந்த குழந்தையின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரைச் சேர்ந்த சபீதா என்பவரின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், குழந்தைக்கு பரிசோதனை மேற்கொண்டார். மருத்துவரின் அறிவுரைப்படி குழந்தைக்கு இருமல் மருந்து வழங்க பரிதுரைக்கப்பட்டுள்ளது. அரசு மருந்தகத்தில் இருமல் மருந்தை வாங்கிய சபீதா, வீட்டிற்குச் சென்று அதனைத் திறந்து பார்த்தார். பாட்டிலின் மூடிப்பகுதி துருப்பிடித்து சேதமடைந்திருப்பதையும், அதன் துகள் பாட்டிலுக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்தார். உடனடியான மருந்தகத்திற்குச் சென்ற சபீதா, மருந்தாளுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் வெங்கடேசிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, மருந்து தரமானதாக இருந்ததாகவும், தவறுதலாக துருப்பிடித்த மூடியோடு தரப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதை பெற்றுச்சென்ற சபீதாவிடம் விசாரித்தபோது, எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை எனத் தெரியவந்ததாகவும் பதில் அளித்தார்.