மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து என காஞ்சிபுரம் மாவட்டத்தில் வதந்தி பரவி வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகள் மூலம் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதனிடையே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம், விபத்தா அல்லது சதியா என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளார் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்து என காஞ்சிபுரம் மாவட்டத்தில் வதந்தி பரவி வருகிறது. வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அம்மன் கோயிலுக்கு வளையல் போட வேண்டும் என்றும் ஆண் குழந்தைகள் என்றால் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாசலில் விளக்கு வைக்க வேண்டும் என்றும் வதந்தி பரவுவருகிறது. இதுமட்டுமில்லாமல் கிரகணம் நடந்தது முதலே நேரம் சரியில்லை என்றும் வதந்தி பரவுகிறது. வதந்தியால் காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபத்தூரில் உள்ள பல வீடுகளின் வாசல்களில் விளக்குகளும் வைக்கப்பட்டுள்ளன.