செய்தியாளர்: செ.சுபாஷ்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது குழந்தைக்கு பிரபலமான குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த குளிர்பானத்தில் ரப்பர் வாசர் போன்ற பொருள் ஒன்று கிடந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குளிர்பான விநியோக மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது மேலாளர் முறையாக பதிலளிக்காமல் முரண்பாடாக பேசியதோடு “சட்டரீதியா அணுகி, உங்களால பண்ணி முடிஞ்சத பாத்துக்கோங்க” என்று சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து தங்கராஜ், தனது நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் மதுரை உணவுத் துறை அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
குழந்தைகள் விரும்பிப் பருகும் பிரபலமான பாரம்பரிய குளிர்பானத்தில் குழந்தைகளின் உயிரை பறிக்கும் வகையில் ரப்பர் பொருள் கிடந்ததை முறையாக சோதனை செய்யாமல் விற்பனைக்கு கொண்டு வந்த குளிர்பானம் நிறுவனம் மீது வழக்குத் தொடர போவதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.