நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால் உதவி தலைமை ஆசிரியரை கண்டித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்துவந்ததால் மழைநீர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, குமாரபாளையம் அரசுப் பள்ளிகளில் மழை தேங்கியது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்த வருவாய்க் கோட்டாட்சியர் மழைநீரால் ஓடைகள நிரம்பி அதன் மூலம் வெளியேறும் உபரி நீர் பள்ளிகளை சூழ்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட கல்வி அலுவலர் ரவி, வட்டாட்சியர் தமிழரசி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர். அங்கு ஆய்வு மேற்கொண்ட பின்னர், திடீரென அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு கணித அறிவியல் பாடப்பிரிவு வகுப்பறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்களிடம் கேட்டபொழுது தற்பொழுது தமிழ் பாடவேளை எனவும், தமிழாசிரியர் ஓய்வறையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கேட்டபொழுது தலைமை ஆசிரியருக்கு தற்பொழுது மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகவும், உதவி தலைமை ஆசிரியர் உள்ளதாகவும் தெரிவித்ததன்பேரில் அங்கு வந்த உதவி தலைமை ஆசிரியர் யுவராஜிடம் இதுகுறித்து கேட்டார்.
அப்போது ஆசிரியர் தற்பொழுது வந்துவிடுவார் என மழுப்பலாக பதில் அளித்ததால், கோபமடைந்த வருவாய் கோட்டாட்சியர் உதவி தலைமையாசிரியருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மாவட்ட கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துவிட்டு அவர் மீண்டும் தனது ஆய்வு பணியைத் தொடங்கினார். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யாவின் திடீர் ஆய்வு பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.