தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இத்தனை ஆயிரம் கொலைகளா...? RTI மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 5,109 கொலை வழக்குகள் பதிவாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சமூக ஆர்வலர் சசிகுமார்
சமூக ஆர்வலர் சசிகுமார்புதியதலைமுறை
Published on

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சசிகுமார், நமது மக்கள் சாம்ராஜ்யம் என்ற அமைப்பின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். இவர், தமிழகம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில், கொலை, கொலை முயற்சி, குண்டர் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் குறித்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக காவல்துறையிடம் புள்ளிவிவரங்களைப் பெற்றுள்ளார்.

கொலை
கொலைPT

அவருக்கு காவல்துறை அளித்த விவரங்களின்படி, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும், தமிழகம் முழுவதும் 5,109 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7,941 கொலை முயற்சி வழக்குகளும், குண்டர் சட்டத்தின் கீழ் 4,566 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக ஆர்வலர் சசிகுமார்
உத்தரப்பிரதேசம்: பாபாவின் காலடி மண் எடுக்க குவிந்த கூட்டமா அது? உயரும் உயிரிழப்புகள்!

இந்த புள்ளிவிவரங்களின்படி, கடந்த 6 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில்தான், அதிக எண்ணிக்கையில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 436 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த இடமான மதுரை மாவட்டத்தில் 369 கொலை வழக்குகளும், தஞ்சாவூரில் 298 கொலை வழக்குகளும் கிருஷ்ணகிரியில் 296 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளன. சேலம் மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 262, சேலம் மாநகர காவல் எல்லையில் 258, நெல்லையில் 255, தேனியில் 222 என கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

கொலை முயற்சி வழக்குகள் என்ற வகையில் அதிக வழக்குகள் பதிவான மாவட்டம் என்ற பட்டியலில் திருநெல்வேலி முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஆயிரத்து 161 வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த இடத்தில், நெல்லையின் அண்டை மாவட்டமான தூத்துக்குடி உள்ளது. இங்கு 947 கொலை முயற்சி வழக்குகளும், தஞ்சாவூரில் 569 கொலை முயற்சி வழக்குகளும், மதுரையில் 496 கொலை முயற்சி வழக்குகளும், சேலம் மாநகரில் 452 கொலை முயற்சி வழக்குகளும், திருவண்ணாமலையில் 374 கொலை முயற்சி வழக்குகளும், கடந்த 6 ஆண்டுகளில் பதிவாகியுள்ளன.

இதேபோல குண்டர் சட்டத்தின் கீழ், கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்சமாக நெல்லையில் 876 வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த இடத்தில், சேலம் மாநகரில் 568 வழக்குகளும், தூத்துக்குடியில் 366 வழக்குகளும், திருப்பூரில் 335 வழக்குகளும், மதுரை மாநகரில் 299 வழக்குகளும் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவாகி உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில், குறைந்த எண்ணிக்கையாக திருச்சி மாவட்டத்தில் 42 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதே திருச்சியில் 41 கொலை முயற்சி வழக்குகளும், நீலகிரி மாவட்டத்தில் 3 குண்டாஸ் வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பல மாவட்டங்களில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புள்ளிவிவரங்களை தரவில்லை என்றும், சமூக ஆர்வலர் சசிகுமார் தெரிவித்துள்ளார். எனினும், காவல்துறையினர் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குற்றங்களை குறைக்குமாறு டிஜிபி அலுவலகத்திலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com