”10.5% இடஒதுக்கீட்டை தாண்டி அரசு வேலையில் வன்னியர்கள்”- RTI தகவலும், ராமதாஸின் மறுப்பு அறிக்கையும்!

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக, தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்திவரும் நிலையில், அதற்குமேல் வன்னியர் சமூக மக்கள் பயன்பெற்று வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.
PMK founder Ramadoss
PMK founder RamadossPT Web
Published on

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக, தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்திவருகிறது. இந்த நிலையில், கடந்த 2018 முதல் 2022 வரை அரசு இடஒதுக்கீட்டின்கீழ் 10.5 சதவிகிதத்திற்கும் மேல் வன்னியர் சமூக மக்கள் பயன்பெற்று வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையத்திடமிருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைப் பெற்றுள்ளார்.

அதன்படி,

2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 24,330 மாணவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (MBC/DNC) இடஒதுக்கீட்டின்கீழ் 4,873 பேர் மருத்துவக் கல்வி பெற்றுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது 11.4 (2,781) சதவீதம் பேர் வன்னியர் மாணவர்கள். 5.8 சதவீதம் பேர் (1,414) வன்னியர் அல்லாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 678 மாணவர்கள் சீர்மரபினர் (DNC) பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இதேபோன்று முதுகலை மருத்துவக் கல்வியிடங்களில் எம்.பி.சி. பிரிவினருக்கான 1,363 இடங்களில் வன்னியர் மாணவர்கள் 694 (10.2%) இடங்களைப் பெற்றுள்ளனர். இதர எம்.பி.சி. மாணவர்கள் மற்றும் சீர்மரபினர் முறையே 9.1 % (636) மற்றும் 4 % (279) இடங்களைப் பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க: OLYMPIC குத்துச்சண்டை சர்ச்சை|மகளின் பாலினம் குறித்து எமோஷனலாக பேசிய தந்தை! மன்னிப்புகேட்ட வீராங்கனை

PMK founder Ramadoss
“தேர்தல் நேரங்களில் மட்டும் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி ஏமாற்றி வருகிறது பாமக” - அமைச்சர் ரகுபதி

மேலும், 2013 முதல் 2022 வரை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்ட 1,919 (MBC) உதவி ஆய்வாளர்களில் (sub-inspectors) 17 (327) சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தினர். அதேசமயம் சீர்மரபினர் 152 (7.9%) மற்றும் பிற MBCS வகுப்பினர் 126 (6.6%) இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

அதுபோல், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் இதேகாலத்தில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 8,379. இவர்களில் எம்.பி.சி கோட்டாவினுள் வருவோரில் 1,185 பேர். அதாவது 10.9 சதவீதம் பேர் வன்னியர்கள். மொத்த பணியிடங்களில் 17.1 சதவீதம் பேர் வன்னியர்கள் தேர்வாகியுள்ளனர்.

அடுத்து, 2021ஆம் ஆண்டில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எம்.பி.சி. கோட்டாவில் பணியமர்த்தப்பட்ட 634 ஆசிரியர்களில் 383 பேர் வன்னியர் சமுதாயத்தினர். மொத்த பணிவாய்ப்பில் 17.5 சதவீதம் வன்னியர்களுக்குக் கிடைத்துள்ளது.

அதுபோல், 2012 முதல் 2023 வரையிலும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணிகளுக்கு தேர்வானவர்களில், எம்.பி.சி. கோட்டாவில் 11.2 சதவீத இடங்கள் வன்னியர்களுக்கு கிடைத்துள்ளன. குறிப்பாக, 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மொத்த பணியிடங்களான 2,682இல் 366 இடங்கள். அதாவது 13.6 சதவீத இடங்கள் வன்னியர் தேர்வர்களுக்கு கிடைத்துள்ளன.

அதுபோல், குரூப் 4 பணியிடங்களில் 2013 முதல் 2022 வரையிலான நியமனங்களில், வன்னியர்கள் 19.5 சதவீதத்திற்கு வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நீதித்துறை சார்ந்த பணியிடங்களில், 2013 முதல் 2022 வரையிலான காலத்தில் 79 பேர் எம்.பி.சி. பிரிவின்கீழ் நீதிபதிகளாக தேர்வாகியுள்ளனர். இவர்களில் 39 பேர், அதாவது 9.9 சதவீதம் பேர் வன்னியர்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பொன்பாண்டியன் பெற்ற தகவல்கள் மூலம் வன்னியரின் இடஒதுக்கீடு விவரம் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: பாரிஸ் ஒலிம்பிக்| 10 முறை வாந்தி எடுத்த டிரையத்லான் வீரர்.. செய்ன் நதியின் மாசுபாடு காரணமா? #Video

PMK founder Ramadoss
‘சமூகநீதிக்கு சாவுமணி’ - இடஒதுக்கீடு தொடர்பாக யுஜிசி வழிகாட்டுதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

இதன்மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கோரிக்கை பொருளற்றது என்பது நிரூபணமாகியுள்ளதாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. செந்தில் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம், தமிழகத்தில் பேசுபொருளான நிலையில், இதுதொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டதாக திரிக்கப்பட்ட, அரைகுறை விவரங்களுடன் கூடிய புள்ளிவிவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டப்படி பதில்களாக வெளியிட்டுள்ள தமிழக அரசு, இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

Attachment
PDF
VANNIYAR BENEFITS ON 20_ RESERVATION.pdf
Preview

இதுபோன்ற மோசடிகளை அரங்கேற்றுவதன் மூலம் வன்னியர்களுக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயன்றால், அதற்கு கிடைக்கப் போவது படுதோல்விதான். தமிழக அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்தால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முன்வர வேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?”ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற சகவீராங்கனைக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வீரர்

PMK founder Ramadoss
மருத்துவபடிப்பில் வன்னியர் இடஒதுக்கீடு: கலந்தாய்வை நிறுத்தக்கோரிய வழக்கை திரும்பபெற்ற பாமக

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, "அரைகுறை தரவுகளுடன் வன்னியர் துரோகத்தை மறைப்பதா? அனைத்து சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்!" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50% விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடி கண்டிக்கத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த கொண்டயன்கோட்டை மறவன் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு தமிழக அரசின் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டதாகக் கூறி, டி.டி.நெக்ஸ்ட் என்ற ஆங்கில நாளிதழ் சில விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் தமிழக அரசின் நோக்கம்.

தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் முழுமையானவையாக இல்லை; அரைகுறையாகவும், திரிக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. அவற்றுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் முதல் தொகுதி பணிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்றவற்றில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து எந்த விவரமும் தமிழக அரசு வெளியிட்ட தரவுகளில் இல்லை.

2. தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள துணை ஆட்சியர் நிலையிலான 542 பேரில், 63 பேர் அதாவது 11.60 விழுக்காட்டினர் வன்னியர்கள் என்று தமிழக அரசு கோருகிறது. இது திரிக்கப்பட்ட புள்ளிவிவரம் ஆகும். டி.என்.பி,.எஸ்.சி முதல் தொகுதிக்கான தேர்வு மூலம், 20% இட ஒதுக்கீட்டில் துணை ஆட்சியர் பணிக்கு வன்னியர்கள் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பதைக் கொண்டு தான் அவர்களின் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்பட வேண்டும். அது தான் சமூகநீதி.

ஆனால், ஒட்டுமொத்தமாக பணியில் உள்ள வன்னியர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு அளித்து உள்ளது. அவர்களின் மூன்றில் இரு பங்கினர் வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியில் சேர்ந்து பதவி உயர்வு மூலம் இந்த நிலையை அடைந்திருப்பார்கள். அவர்கள் ஓரிரு ஆண்டுகள் கூட இந்த பணியில் இருக்க மாட்டார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறுவது பித்தலாட்டம் ஆகும்.

3. காவல்துறை உதவி ஆய்வாளர் நியமனங்களில் 20% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சமுதாயங்கள் எந்த அளவுக்கு பயனடைந்தன என்பது குறித்த விவரங்களை வெளியிடாமல், மொத்தம் 100% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டனர் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. இதை விட மிகப்பெரிய ஏமாற்று வேலை இருக்க முடியாது. அப்படிப் பார்த்தாலும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர் மரபினர் இணைந்து 14.50% இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள்.

4. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான புள்ளிவிவரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகிய பணிகளில் வன்னியர்களின் பிரதிநித்துவம் குறித்த விவரங்களை அரசு மறைப்பது ஏன்?

5. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டது 1989-ஆம் ஆண்டு. அப்போது முதல் இப்போது வரையிலான புள்ளிவிவரங்களை வெளியிட்டால் தான் வன்னியர்களுக்கும், பிற சமூகங்களுக்கும் கிடைத்த உண்மையான பிரதிநிதித்துவம் தெரிய வரும். ஆனால், அதை விடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிடுவது வன்னியர் சமூகத்தை ஏமாற்றும் செயல் தானே?

6. தமிழ்நாட்டில் தொகுதி 1, தொகுதி 2 பணிகள் தான் ஓரளவு உயர்ந்த நிலையில் உள்ள பணிகள். அவற்றில் வன்னியர்களின் நிலை என்ன? என்பதற்காக சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்ற 95 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பணி ஆணைகளை வழங்கினார். அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 19 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் வன்னியர்களுக்கு 10.50% வீதம் 11 பதவிகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கிடைத்ததோ 5 இடங்கள் தான். இது வெறும் 5% மட்டும் தான். இது வன்னியர்களுக்கு போதுமானதா?

அதேபோல், தொகுதி 2 பணிகளில் 161 காலியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் வன்னியர்களுக்கு 17 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், எட்டுக்கும் குறைவாக இடங்கள் மட்டும் கிடைத்துள்ளன. இது கிடைக்க வேண்டியதில் பாதிக்கும் குறைவு. உண்மை நிலை இவ்வாறு இருக்க வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டதாக தமிழக அரசு கூறுவது மோசடி என்பதைத் தவிர வேறு என்ன?

தமிழ்நாட்டில் 1989-ஆம் ஆண்டுக்கு பிந்தைய 35 ஆண்டுகளில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தால் அதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் மகிழ்ச்சி தான். ஆனால், அந்த விவரங்களை வெளியிட திமுக அரசு காலம் காலமாக மறுத்து வருகிறது.

அரசு வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என 2020-ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்த விவரங்களை வெளியிட்டால் தமிழ்நாட்டில் சமூகக் கொந்தளிப்பு ஏற்படும் என்று தமிழக அரசும், தேர்வாணையமும் கூறின. ஆனால், இப்போது திடீரென வன்னியர்கள் குறித்த புள்ளி விவரங்களை மட்டும் திரித்து வெளியிட்டிருப்பது ஏன்? இப்போது சமூகக் கொந்தளிப்பு ஏற்படாதா? வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற மாயையை ஏற்படுத்துவது தானே அரசின் நோக்கம்.

எந்த ஒரு சிக்கலையும் திசை திருப்ப வேண்டும் என்றால், அதற்காக எதையும் செய்யத் துணிந்தது தான் திமுக அரசு. அத்தகையதொரு திருவிளையாடலைத் தான் இப்போது அரங்கேற்ற முயல்கிறது. திமுகவின் அனைத்து மோசடி வேலைகளையும் அறிந்தவர்கள் தான் தமிழக மக்கள். அவர்கள் இத்தகைய சித்து விளையாட்டுகளை நம்பி ஏமாற மாட்டார்கள். இதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.

தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், 1989-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்வணையமும் நடத்திய போட்டித் தேர்வுகள் என்னென்ன? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் ஒவ்வொரு வகுப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? பொதுப்பிரிவுக்கான 31% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com